ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் ‘ஸ்மார்ட் கீ’ (Smart Key) திறப்புகளைத் திருடி விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்த துறைமுக ஊழியர் ஒருவரும், அவற்றைக் கொள்முதல் செய்த வியாபாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (11) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாகனங்களின் ‘ஸ்மார்ட் கீ’ திறப்புகள் காணாமல் போனமை தொடர்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட நீண்டகால தேடுதல் நடவடிக்கையின்போது, துறைமுக ஊழியர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த ஊழியரை பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்று, மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
துறைமுக ஊழியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், திருடப்பட்ட ‘ஸ்மார்ட் கீ’ திறப்புகளை குருநாகல் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு வாகனத்தின் வகைக்கு ஏற்ப 6,000 ரூபாய் முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கடந்த சில மாதங்களில் சுமார் 45 ‘ஸ்மார்ட் கீ’ திறப்புகளை விற்பனை செய்துள்ள குறித்த ஊழியர், இதன் மூலம் 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைப் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட துறைமுக ஊழியர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், குருநாகல் பகுதியைச் சேர்ந்த குறித்த வியாபாரியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். விசாரணைகளின்போது, அவர் குறித்த ‘ஸ்மார்ட் கீ’ திறப்புகளைக் கொள்முதல் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வியாபாரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ‘ஸ்மார்ட் கீ’ திறப்புகளையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யத் தொடங்கிய காலப்பகுதியிலிருந்தே இந்த மோசடி நடவடிக்கை இடம்பெற்று வந்துள்ளதாக துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினரும் பொலிஸாரும் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரியந்தவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத் தடுப்புப் பிரிவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








