யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஒரு பைத்தியம், முள்ளிவாய்க்கால் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தைப் புகழ்ந்து பாடியுள்ளதாகவும், அந்தப் பைத்தியத்தைத் தெளிய வைக்க விரைவில் மருந்து கட்டுவேன் எனவும், அதேவேளை அனுர அரசாங்கம் 20 வருடங்கள் நிலைத்து நின்று ஆட்சி செய்யும் எனவும் ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கொலை, கொள்ளை, குடிகாரர்கள் தான் இருக்கின்றனர் என்பது உலகத்துக்கே தெரிந்துள்ளது. இருந்தபோதும், அரசாங்கத்திற்கு எதிராக அனுராதபுரத்தில் பெரிய கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு சென்றவர்கள் அனைவரும் வீதியில் தவழ்ந்து கொண்டிருந்ததை முகநூலில் பார்த்திருப்பீர்கள்.
அது மட்டுமல்ல, மஹிந்த அல்லது நாமல் கூட்டத்தில் பணத்தைப் பெற்றுக்கொண்டதற்காக ‘அனுர கள்ளன்’ எனவும், அடுத்ததாக ‘நாமல் கள்ளன்’ எனவும் கோஷமிட்டனர். உண்மையில் அடிமனதில் இருந்து ‘நாமல் கொரா’ எனச் சொல்லப்பட்டது.
பணத்தையும் மதுபானத்தையும் வாங்குவதற்கு ‘அனுர கொரா’ எனச் சொல்வது கடமை. ஏனென்றால் பணத்தையும் மதுபானத்தையும் பெற்றுக்கொண்டதற்காக அவ்வாறு கூறினர். ஆனால், அடிமனதில் இருந்து ‘நாமல் கொரா’ எனச் சொன்னார்கள். இதுதான் நிலைமை.

இலங்கையில் இவ்வளவு பேரும் அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவாளர்களாக உள்ளனர் என்பது ஊடகங்கள் மூலம் தெரிகின்றது. கடந்த ஊடக சந்திப்புகளில் தெரிவித்ததுபோல், முடியும் என்றால் இந்த அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுங்கள். அப்படி இல்லை என்றால் கட்சியைக் கலைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று ஓய்வு எடுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் 75, 80, 90 வயதாகிவிட்டது. இனி உங்களால் முடியாது.
இந்த அரசாங்கம் மக்களின் மனதைத் தொட்ட அரசாங்கம். மக்களால் உருவாக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம். எனவே, இந்த அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் செய்து வேலை இல்லை.
மக்கள் மனதில் இருந்து அகற்றினால் தான் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியும். எனவே, தயவுசெய்து அதைக் கைவிட்டுவிட்டு அரசாங்கத்திற்கு நல்ல ஆலோசனைகளை வழங்குங்கள். என்னதான் தலைகீழாக நின்றாலும், 20 வருட காலம் இந்த அரசாங்கம்தான் நிலைத்திருக்கும்.

இன்று இலங்கையில் உள்ள மூவின மக்களும் ஜனநாயகக் காற்றை சுவாசித்துக்கொண்டு, சுதந்திரமாக நடமாடி, சுதந்திரமாக தொழில் செய்து, சந்தோஷமாக வாழும் தோற்றப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், முள்ளிவாய்க்கால் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பைத்தியம் சென்று அந்த நயவஞ்சகர்களைப் புகழ்பாடுகிறது.
அந்தப் பைத்தியம் வாங்கிய பணத்துக்காக ஆடியுள்ளார். எனவே, அவர் கடவுளை மன்றாட வேண்டும். எனது கண்ணில் முழித்துவிடக் கூடாது. இந்தப் பைத்தியத்துக்கு கூடிய விரைவில் மருந்து கட்டுவேன். பைத்தியத்தைத் தெளிய வைக்க வேண்டும். இது தமிழ் மக்களுக்கு ஒரு விஷமி, சாபக்கேடு. இவ்வாறான பைத்தியங்கள் காலம் காலமாக வரும். அதை நாங்கள்தான் இனங்காண வேண்டும் என்றார்.








