நாட்டின் ஒற்றையாட்சி முறைமை தமிழர்களின் எதிர்காலத்தை மாத்திரமன்றி, முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்களின் இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று முன் தினம் (20) நடைபெற்ற சிரேஷ்ட சட்டத்தரணி க. சுகாஷ் எழுதிய ‘தமிழன் கனவு’ நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஆசிரியர் தருமலிங்கம் சுரேஷ் தலைமை தாங்கினார்.
கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியப் பொருளாளர் கணபதிப்பிள்ளை நீலாம்பரம் குருக்கள் மற்றும் இயேசு சபைத்துறவி யோசேப் மேரி சுவாமிகள் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர். கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் குமாரசாமி ரவிச்சந்திரன் முதன்மை விருந்தினராகவும், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘தமிழன் கனவு’ என்ற எண்ணக்கரு தொடர்பில் சிந்திக்கும்போது, முதலில் தமிழர்கள் தமது அடையாளத்துடன் வாழக்கூடிய சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தமிழர் என்ற அடையாளத்துடன் மொழி, கலாசாரம் மற்றும் நிலப்பரப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்புபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவற்றின் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் ஆட்சிமுறையே பல பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணமாக இருப்பதாகத் தாம் கருதுவதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக, ஒற்றையாட்சி முறைமை தொடர்பில் சுகாஷ் தனது சட்ட அறிவின் அடிப்படையில் நூலில் பதிவு செய்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
ஒற்றையாட்சி முறைமை தமிழர்களின் எதிர்காலத்தை மாத்திரமன்றி, முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்களின் இருப்பையும் பாதிக்கும் வகையில் அமையக்கூடும் என அவர் தனது உரையில் தெரிவித்தார்.
மேலும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் காணப்படும் ஒற்றுமை நாட்டின் அரசியல் சூழலில் முக்கியமானதாக அமையக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் தமிழ் பேசும் மக்களைப் பிரித்தாளும் முயற்சிகள் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், ‘தமிழன் கனவு’ நூலில் ஒற்றையாட்சி தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துகளை வாசகர்கள் கவனத்துடன் படிக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணி எப்.எக்ஸ்.எஸ். விஜயகுமார் அறிமுக உரையையும், பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான நவரத்தினம் சிவகுமார் விமர்சன உரையையும் நிகழ்த்தினர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சிறப்புரையாற்றியதுடன், சட்டத்தரணி பஹீர் மொஹைதீன் வஹாத், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உபதலைவியும் மட்டக்களப்பு மாவட்டத் தலைவியுமான அமலராஜ் அமலநாயகி மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தியாகு முகிலன் ஆகியோரும் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
நிகழ்வின் நிறைவில் நூலாசிரியரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான க. சுகாஷ் ஏற்புரையாற்றியதுடன், ஆசிரியர் கணபதிப்பிள்ளை குககுமாரராஜா நன்றியுரை வழங்கினார்.
கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் குமாரசாமி ரவிச்சந்திரனால் ‘தமிழன் கனவு’ நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், சிறப்பு பிரதிகளும் வழங்கப்பட்டன. நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.








