தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை, வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் புதிய அத்தியாயமாக அமையும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண தொழிற்துறை மன்றம் இணைந்து ஏற்பாடு செய்த உலக சுற்றுலா தினம் – 2026 நிகழ்வு நேற்று (25) மன்னார் அல்பத்தா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய ஆளுநர், புதிய சுற்றுலா வாய்ப்புகள் மூலம் மன்னார் மாவட்டத்துக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் கைவினைப் பொருட்களை சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேலும் வளர்ச்சியடையச் செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தலைமன்னாரிலிருந்து எட்டு மணல் திட்டுகளை பார்வையிடுவதற்கான புதிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளமை, மன்னாரின் இயற்கை மற்றும் சுற்றுலா வளங்களை உலகளவில் அறிமுகப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.







