இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC), 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 29.2 பில்லியன் ரூபாய் நிகர இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் அரசாங்கம் வழங்கிய 41 பில்லியன் ரூபாய் மானியத்தின் பின்னணியிலேயே இந்த இலாபம் பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 17 பில்லியன் ரூபாயாக இருந்த நிகர இலாபம், இவ்வாண்டு 71.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
எனினும், கூட்டுத்தாபனத்தின் மொத்த இலாபம் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 32.8 பில்லியன் ரூபாயாகப் பதிவான மொத்த இலாபம், இவ்வாண்டு 72.9 சதவீதத்தால் குறைந்து 8.9 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு இலாபம் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 11.1 பில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், இவ்வாண்டு முதல் ஆறு மாதங்களில் 23.9 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை திறைசேரியிடமிருந்து கிடைத்த மானியமே செயற்பாட்டு இலாப அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.








