பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த பானங்களை வழங்கி, அவர்களை கடத்திச் சென்று தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதுடன், பெண்களை கொலை செய்து கிணற்றில் வீசியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கணவன், மனைவி மற்றும் கணவனின் சகோதரன் ஆகிய மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மூவரும் கடந்த மார்ச் 21ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு கடந்த 28ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து கடந்த மார்ச் 20ஆம் திகதி 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், ஏற்கனவே காணாமல் போனதாக கருதப்பட்ட மற்றொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது. அத்துடன், இளம் தாயின் 3 வயது 4 மாத குழந்தையும் வயல் பகுதியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில், கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் சதீஸ்வரன், அவரது 26 வயதுடைய மனைவி சோமசுந்தரம் சர்லியா மற்றும் சதீஸ்வரனின் 22 வயதுடைய சகோதரர் வெற்றிவேல் தனோஜன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் நித்திரை மாத்திரைகள் உள்ளிட்ட மயக்க மருந்துகளை பானங்களில் கலந்து பெண்களுக்கு வழங்கி, அவர்களை கடத்தி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாகவும், சிலரை கொலை செய்து கிணற்றில் வீசியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் இரு நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட மேலும் சிலரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு முச்சக்கரவண்டிகள், ஒரு கார் மற்றும் கோடாரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து மயக்க மருந்து பயன்படுத்தியதாக கூறப்படும் ஸ்பிரே உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மயக்க மருந்துகள் மற்றும் மாத்திரைகளை வழங்கியதாக கூறப்படும் கொழும்பு, வத்தளை பகுதியில் உள்ள மருந்தக உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான சந்தேகநபர்களாக குறிப்பிடப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூவருக்கு எதிராக மூன்று சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில் பெண் ஒருவருக்கு மயக்க மாத்திரை கலந்த பானத்தை வழங்கி அவரது தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டமை, பழுகாமம் பகுதியில் மற்றொரு பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானத்தை வழங்கி கடத்திச் சென்று தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பின்னர், கொக்கட்டிச்சோலை செல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள கிணற்றில் வீசி கொலை செய்தமை ஆகியவை அவற்றில் அடங்குகின்றன.
மேலும், வவுணதீவு பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவருக்கும் அவரது 3 வயது 4 மாத குழந்தைக்கும் மயக்க மருந்து கலந்த பானத்தை வழங்கி முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று, தாயின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பின்னர், முன்னதாக பெண்ணொருவரை வீசி கொலை செய்ததாக கூறப்படும் அதே கிணற்றில் இளம் தாயையும் வீசியதாகவும் பொலிஸார் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
அதேவேளை, குறித்த குழந்தையை சதுப்பு நிலப் பகுதியில் தனியாக விட்டுச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சந்தேகநபர்கள் மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு, வழக்கை அடுத்த தவணைக்கு ஒத்திவைத்தார்.







