மொனராகலை – ரத்தனபிட்டிய பகுதியில் திருடும் நோக்கில் வீடொன்றுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர், வீட்டில் இருந்த கட்டிலில் தூங்கிய நிலையில் வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் இரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் வீட்டில் இருந்த கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார்.
இந்நிலையில், மறுநாள் அதிகாலை வீட்டார் எழுந்தபோது, தங்களுக்கு அறிமுகமில்லாத நபர் ஒருவர் வீட்டின் கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின்போது, “தற்செயலாக நித்திரை வந்ததால் கட்டிலில் தூங்கிவிட்டேன்” என சந்தேகநபர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வீட்டின் கதவு உடைக்கப்பட்டதன் காரணமாக சுமார் 10,000 ரூபாய் பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டிலிருந்து எந்தவொரு பொருளும் திருடப்படவில்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








