மத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழல், உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மை மற்றும் எல் நினோ வானிலை தாக்கம் காரணமாக இலங்கை பொருளாதாரத்திற்கு மீண்டும் அபாயங்கள் ஏற்படக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப உள்நாட்டு எரிபொருள் விலைகளை மாற்றியமைக்க வேண்டும் எனவும், மின்சாரம் மற்றும் எரிசக்திக்கான விலைக் கொள்கைகள் செலவை ஈடுசெய்யும் வகையில் தொடர்ந்து பேணப்பட வேண்டும் எனவும் IMF அறிவுறுத்தியுள்ளது.
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான 7ஆவது மீளாய்வு தொடர்பில் அதிகாரிகள் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கைக்கான IMF பிரதிநிதி இவான் பபாஜோர்ஜியோ இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில், அனைத்து நுகர்வோருக்கும் பொதுவான மானியங்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் IMF பரிந்துரைத்துள்ளது. அதற்குப் பதிலாக, விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படும் குறைந்த வருமானம் கொண்ட மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களுக்கு மட்டுமே இலக்கு வைக்கப்பட்ட நிவாரணங்களை வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் தற்போது தொடர்ந்தும் ஸ்திரமான நிலையில் காணப்படுவதாக IMF தெரிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஆகஸ்ட் மாத இறுதியில் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மத்திய கிழக்கு நெருக்கடியால் நாட்டில் பணவீக்க அழுத்தம் அதிகரிக்கும் பட்சத்தில், அதனை எதிர்கொள்ள இலங்கை மத்திய வங்கி தேவையான நேரத்தில் நாணயக் கொள்கையை இறுக்குவதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் IMF வலியுறுத்தியுள்ளது.








