இலங்கையில் பெண்களிடையே அதிகளவில் காணப்படும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் காணப்படும் தாமதம், உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வருடாந்தம் 6,000க்கும் அதிகமான மார்பகப் புற்றுநோய் நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகின்றனர். இவர்களில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
இதன்படி, சராசரியாக நாளொன்றுக்கு 17 புதிய நோயாளர்கள் இனங்காணப்படுவதுடன், மூவர் உயிரிழக்கும் நிலை காணப்படுகின்றது.
மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நோயின் அறிகுறிகள் தென்பட்டாலும், அவற்றை அலட்சியப்படுத்தி மருத்துவ ஆலோசனையைப் பெறுவதில் பலர் தாமதிப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகல தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் சிகிச்சையின் வெற்றியை அதிகரிக்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார்.








