சுமார் 2,000 முதலீட்டாளர்களுக்கு இலாபப்பங்கு வழங்குவதாகக் கூறி பெருந்தொகையான பணத்தைப் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில், இரண்டு தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (20) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கண்டி மற்றும் கொஹுவல பகுதிகளில் இயங்கி வந்த இரண்டு தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மொத்த நிதி மோசடியின் பெறுமதி சுமார் 4 பில்லியன் ரூபா என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் எதிராக இதுவரை மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்திற்கு 80 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று (21) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








