பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வங்கி அதிகாரி ஒருவரை எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
களனி பகுதியைச் சேர்ந்த குறித்த வங்கி அதிகாரியை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு எதிராக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை தெரிந்திருந்தும், சந்தேகநபர் தனது தனிப்பட்ட வாகனத்தில் அவரை ராஜகிரிய பகுதியில் இருந்து எல்பிட்டிய பகுதிக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கையிலிருந்து ஞானசார தேரர் தப்பிக்க உதவியமை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறியமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகள் இதுவரை நிறைவடையாத நிலையில், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.
இரு தரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். பொதரகம்ம, சந்தேகநபரை ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தீனியாவல ஆரண்ய சேனாசன விகாரையில் தலைமறைவாக இருந்த கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.








