அரச நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கும் போது தனியார் நிறுவனங்களும் அரச நிறுவனங்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், ‘Builders’ Gateway’ எனும் நிர்மாணத்துறை வசதியளித்தல் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று (20) இந்தப் பிரிவு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய, VIYASA தேசிய வணிக வசதியளித்தல் மையத்துடன் இணைந்து இந்தப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய இணையத்தளமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிர்மாணத்துறையினர் தமது பிரச்சினைகள், கோரிக்கைகள், ஆலோசனைகள் மற்றும் முறைப்பாடுகளைப் பின்வரும் வழிகளில் சமர்ப்பிக்க முடியும்:
இணையத்தளம்: https://nbfc.presidentsoffice.gov.lk/
மின்னஞ்சல்: info.nbfc@presidentsoffice.lk
தொலைபேசி: 011 267 2750
வட்ஸ்அப்: 077 354 3495
முகவரி: C80, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, கொழும்பு 07.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, அரசாங்கத்தின் பெரும்பாலான நிர்மாணப் பணிகளைத் தனியார் நிறுவனங்களே முன்னெடுத்து வருவதாகவும், இதன்போது பல்வேறு நிர்வாக மற்றும் நடைமுறைச் சிக்கல்களுக்கு அவை முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தனியார் நிறுவனங்கள் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளைச் சந்திக்க வேண்டிய நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சிரமங்களைக் குறைத்து நிர்மாணத்துறையின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதே புதிய பிரிவை நிறுவுவதன் நோக்கம் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக 2,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் கணிசமான பகுதி நிர்மாணத்துறை மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனால், அடுத்த ஆண்டு நிர்மாணத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக முன்னெடுப்பதற்கு தனியார் நிர்மாண நிறுவனங்களுக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
‘Builders’ Gateway’ ஊடாக பாரிய நிர்மாணத் திட்டங்கள் முதல் சிறிய அளவிலான நிர்மாணப் பணிகள் வரை எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளுக்கு உரிய அரச நிறுவனங்களின் ஊடாகத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படாது எனவும், முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
எனினும், அரச நிறுவனங்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பது இந்தப் பிரிவின் நோக்கமல்ல எனத் தெளிவுபடுத்திய அமைச்சர், தனியார் நிறுவனங்களின் தேவைகள் மற்றும் அரச நிறுவனங்களின் நடைமுறைகள், சட்டதிட்டங்கள் குறித்து நன்கு அறிந்த அதிகாரிகள் மூலம் இந்தச் சேவை முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் நிர்மாணத்துறையில் நிலவும் தடைகளை நீக்கி, எதிர்வரும் ஆண்டில் அபிவிருத்திப் பணிகளை மேலும் துரிதப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.







