முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்களை பேருந்தில் ஏற்ற மறுத்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை துரித நடவடிக்கை எடுத்துள்ளது.
பனிக்கன்குளம், கிளவன்குளம் மற்றும் திருமுறிகண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலை முடிவடைந்த பின்னர் பேருந்துக்காக காத்திருந்த நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தொன்று மாணவர்களை ஏற்ற மறுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
மேலும், பேருந்தில் ஏற முற்பட்ட மாணவி ஒருவர் தவறி விழ நேரிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் உடனடியாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த பேருந்து கண்டி இலங்கை போக்குவரத்துச் சபை சாலைக்குரியது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்படி, உரிய பிராந்திய முகாமையாளர் ஊடாக சம்பந்தப்பட்ட சாரதியை தற்காலிகமாக பணியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தையும், அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றி நடைபெறுவதையும் உறுதி செய்வது பொதுப் போக்குவரத்து சேவையின் முக்கிய பொறுப்பு எனக் குறிப்பிட்ட அவர், பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அதிகார சபை பொறுத்துக்கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார்.
சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் விதிமீறல்கள், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயற்பாடுகள் தொடர்பில் ஆதாரங்களுடன் 071 9090900 என்ற வட்ஸப் இலக்கத்துக்கு முறைப்பாடுகளை அனுப்புமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் உள்ளிட்ட ஆதாரங்களையும் முறைப்பாடுகளுடன் இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








