மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மாதத்தின் பின்னர் உயிரிழந்த நிலையில், அவரது மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதால் சடலம் நேற்று (07) தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 12ஆம் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் இடம்பெற்ற விபத்தில், கிரான்குளம் கடற்கரை வீதியைச் சேர்ந்த 41 வயதான சர்வேஸ்வரன் கஜேந்தினி என்ற பெண் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையின் பின்னர் ஜூலை 21ஆம் திகதி வீடு திரும்பிய அவர், மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆகஸ்ட் 7ஆம் திகதி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 11ஆம் திகதி உயிரிழந்தார்.
பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆகஸ்ட் 12ஆம் திகதி தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மாதத்தின் பின்னர் மரணம் நிகழ்ந்துள்ளதால், மரணம் விபத்தின் விளைவாக ஏற்பட்டதா என்பதை கண்டறிய பிரேத பரிசோதனை நடத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கமைய, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்சினி முன்னிலையில், பொலிஸாரால் உயிரிழந்த பெண்ணின் சடலம் நேற்று தோண்டியெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸாரின் வீதிப் போக்குவரத்துப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.








