2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திரம் (சாதாரண தர) பரீட்சைக்கான அதிகாரப்பூர்வ நேர அட்டவணை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி, டிசம்பர் 17ஆம் திகதி வியாழக்கிழமை வரை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளன.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, பரீட்சையின் எந்தவொரு பாடத்திற்கும் கணிப்பான்கள் (Calculators) மற்றும் அழிமை திரவம் (Correcting Fluid) உள்ளிட்ட அனுமதிக்கப்படாத உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செல்லிடத் தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களைப் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, மாணவர்கள் பரீட்சை விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, தேவையற்ற உபகரணங்களைத் தவிர்த்து பரீட்சைக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







