கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றின் அறைக்குள் நான்கு வியட்நாம் பிரஜைகளைப் பலவந்தமாகத் தடுத்து வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பில், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 28 வயதுடையவர்கள் என வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இயங்கும் நிறுவனம் ஒன்றின் சீன மேலாளர் 2,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின்போதே இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த முறைப்பாட்டாளர், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறி நான்கு வியட்நாம் பிரஜைகளைப் பொலிஸாரிடம் முன்னிலைப்படுத்தியுள்ளார்.
எனினும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், நிறுவனத்தில் பணியாற்றும் சிலரால் தங்களுக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இரண்டு நாட்களாக விடுதியின் அறையொன்றில் தங்களைப் பலவந்தமாகத் தடுத்து வைத்து தாக்கியதாகவும், தங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான நான்கு வியட்நாம் பிரஜைகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு தெற்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஷன் சூரியபண்டாரவின் பணிப்புரையின் கீழ், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








