ஈரானுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கப்பாட்டை எட்ட முடியாவிட்டால், புத்தாண்டுக்குப் பின்னர் அந்நாட்டின் மீது மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை ‘பொக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், பேச்சுவார்த்தைகளில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாதமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் தொடர்ந்து பேசுவதிலேயே காலத்தைக் கழிப்பதாகவும், நடைமுறையில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை தொடரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாகப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறுவதற்கு ஈரானியக் கப்பல்கள் முயற்சித்தால் அவை தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்படும் என ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். முற்றுகையை மீறிச் செல்லும் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானில் மீண்டும் முன்னெடுக்கப்படும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பான காணொளிகளைப் பார்வையிட்டதாகக் கூறிய ட்ரம்ப், அந்நாட்டு போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடருமாறும் ஊக்குவித்துள்ளார்.
இதேவேளை, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வர்த்தகக் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல்கள் மற்றும் பஹ்ரைனில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் குறித்த தகவல்களும் பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் மோதல் நிலை தீவிரமடைந்தது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் கடந்த ஜூன் மாதம் கட்டமைப்பு ஒப்பந்தமொன்று எட்டப்பட்டு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பேச்சுவார்த்தைகள் முடங்கியதாகக் கூறப்படுகிறது.
இராஜதந்திர ரீதியில் தீர்வொன்றை எட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அவ்வப்போது அதிகரித்து வருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.








