ஏ9 வீதியின் வவுனியா, புளியங்குளம் புதூர் பகுதியில் இன்று (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து அனந்தர் புளியங்குளம் பகுதிக்கு நெல் விதைப்புப் பணிக்காக தந்தை, தாய் மற்றும் குழந்தை ஆகியோர் அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
இதன்போது, புதூர் பகுதியில் முன்னால் சென்ற வாகனமொன்றை முந்திச் செல்ல மோட்டார் சைக்கிள் முயற்சித்தபோது, எதிரே வந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மூவரும் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தந்தையும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த தாய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் புளியங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








