புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் வசதியை ஐந்து மாவட்டச் செயலகங்கள் ஊடாக மீண்டும் வழங்குவதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 19ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டச் செயலகங்களில் புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
குறித்த சேவை முன்னர் இந்த மாவட்டச் செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வந்த நிலையில், கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இதனால், மேற்படி மாவட்டங்களைச் சேர்ந்த புதிய மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களைப் பதிவு செய்வதற்காக நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மாவட்டச் செயலகங்கள் ஊடாகப் பதிவுச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதன் மூலம், பொதுமக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அசௌகரியங்கள் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை மூலம் புதிய மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தமது மாவட்டங்களிலேயே பதிவுப் பணிகளை இலகுவாக மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.








