களுத்துறை, நாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் 35 வயதுடைய நபர் ஒருவர், வாழைச்சேனை நாவலடி பகுதியில் பயணிகள் பேருந்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை (09) இரவு முன்னெடுக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கதுருவெலவிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று இரவு சுமார் 10 மணியளவில் நாவலடி பகுதியில் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது.
இதன்போது, ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய முருகேஷ் சசிகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட நபர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி, களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி, மகசீன், மூன்று தோட்டாக்கள் மற்றும் எஸ்.எப்.ஜி. 87 ரக கைக்குண்டு ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், குறித்த சந்தேகநபரை விசேட அதிரடிப்படையினர் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.








