களுத்துறை, நாகொட பகுதியில் உணவக உரிமையாளரும் அவரது மனைவியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடுவல, ரணால பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2026 ஒக்டோபர் 9ஆம் திகதி நாகொட பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு முன்னால் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 54 வயதுடைய உணவக உரிமையாளர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவரது மனைவி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில், தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் முக்கிய ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகளின் மூலம், பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் கடுவல பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து, களுத்துறை குற்றப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், ‘திப்பிட்டிகொட சக்தி’ என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் ஒருவரின் உறவினருக்குச் சொந்தமான வீட்டில் சந்தேகநபர் மறைந்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் பதுளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ‘களுத்துறை நவீன்’ என அழைக்கப்படும் நபர் ஒருவரின் உத்தரவின் பேரில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் T-56 ரக துப்பாக்கி மற்றொரு நபரால் துப்பாக்கிதாரிக்கு வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டின் பின்னர், குறித்த துப்பாக்கி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் மற்றொரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








