வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடமிருந்து 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவரும் யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (27) குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிறுவனமொன்றின் பணிப்பாளர்களாகச் செயற்பட்ட சந்தேகநபர்கள், வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுள்ளனர். பின்னர், வீடுகளை முழுமையாகக் கட்டி முடிக்காமல் அரைகுறையாக விட்டுவிட்டு, பணத்தை மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், வீடுகளைக் கட்டி முடிப்பதாகக் கூறி வாடிக்கையாளர்களிடமிருந்து மொத்தம் 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபருக்கு 27 வயது எனவும், யுவதிக்கு 19 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் பூகொட மற்றும் தொம்பே பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








