48cc திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்குப் பதிவு தேவையில்லை என சில விற்பனையாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறான வாகனங்களைப் பொதுப் பாதைகளில் பயன்படுத்துவதற்கு முன்னர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது.
பதிவு செய்யப்படாத 49cc மோட்டார் சைக்கிள்களைப் பொதுப் பாதைகளில் செலுத்துவோர் பொலிஸாரால் சட்ட நடவடிக்கைகளுக்கும் அபராதங்களுக்கும் முகங்கொடுக்க நேரிடும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இவ்வாறான மோட்டார் சைக்கிள்களைக் கொள்வனவு செய்யும் பொதுமக்கள், விற்பனையாளர்களின் தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகத் தமது வாகனங்களின் பதிவு நிலையை உறுதிப்படுத்தி, தேவையான பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
போக்குவரத்து விதிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்துவதையும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.








