மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காகவும் இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் சில தரப்பினர் பெரிதுபடுத்துவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுவின் தவிசாளர் கிருஷ்ணகோபால் திலகநாதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மயிலத்தமடு பகுதியில் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், அத்துமீறிய பயிர்ச்செய்கை தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மயிலத்தமடுவில் சுமார் 1,570 ஏக்கர் நிலத்தைப் பண்ணையாளர்களுக்கு விடுவிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனக் குறிப்பிட்ட அவர், நிலத்தை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பண்ணையாளர்களின் பாதுகாப்புக்காகப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், மேய்ச்சலுக்குப் பொருத்தமான நிலங்களை அடையாளம் காண்பதற்கான கள ஆய்வுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை அகற்றுவது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நீதிமன்ற நடைமுறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்படுவதாகவும், பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கிருஷ்ணகோபால் திலகநாதன் மேலும் தெரிவித்தார்.








