அக்குரஸ பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பல்வேறு ஒழுக்கக்கேடான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பெண்களுடன் தொடர்புகளைப் பேணி வந்தமை மற்றும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சிங்களப் புத்தாண்டு விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டவர்களிடமிருந்து 5 இலட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் குறித்த பொலிஸ் அதிகாரி ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், குறித்த உதவிப் பொலிஸ் பரிசோதகரைப் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிநீக்க உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







