நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 5,829 குடும்பங்களைச் சேர்ந்த 21,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் இன்று (03) வரையான காலப்பகுதியில் இந்தப் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டின் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 147 பிரதேச செயலகப் பிரிவுகள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த அனர்த்தங்களினால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். மேலும், மூவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சீரற்ற வானிலை காரணமாக 8 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதுடன், மேலும் 767 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, இரத்தினபுரி மாவட்டமே அதிகளவான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
அங்கு 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இரண்டாவது அதிக பாதிப்பு புத்தளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்குள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.







