யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியில் தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான சுமார் 40 பரப்பு காணியைப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் மீட்டுத் திணைக்களத்திடம் மீண்டும் ஒப்படைத்துள்ளது.
கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவின் காரணவாய் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள நீரேந்து பிரதேசத்திற்குச் சொந்தமான குறித்த காணியைத் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, அதனைச் சுற்றி எல்லை வேலிகளையும் அமைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆக்கிரமிப்பு தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
வழக்கு விசாரணைகளின்போது குறித்த காணி நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதனை மீண்டும் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய, இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பதிவாளர் தலைமையிலான உத்தியோகத்தர்கள், நெல்லியடி பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த காணியை நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் கையளித்துள்ளனர்.
இதன்போது, காணியைச் சுற்றி ஆக்கிரமிப்பாளர் அமைத்திருந்த எல்லை வேலிகளும் அகற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அரச காணிகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான நிலங்களை போலி உறுதிப் பத்திரங்கள் மூலம் அபகரிக்கும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















