எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (10) கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மாவட்டக் கிளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்ஹ தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதுடன், இதனால் வைத்தியசாலைகளின் அன்றாட செயற்பாடுகளுக்கோ நோயாளர் பராமரிப்புச் சேவைகளுக்கோ பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எவ்வித பணிப்புறக்கணிப்புமின்றி வழக்கமான மருத்துவச் சேவைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் சம்பளக் குறைப்பு, கொடுப்பனவுகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதாரத் துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, இன்று நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இணைந்த சுகாதார ஊழியர் சங்கமும் அறிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தங்களது கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.







