சிங்கராஜ வனப் பாதுகாப்புப் பகுதியில் பூச்சிகள் மற்றும் ஊர்வன வகைகளைச் சேகரித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் உட்பட நான்கு சீனப் பிரஜைகள் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடவளவை தேசிய பூங்காவின் பனஹடுவ வனவிலங்கு அலுவலகத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சுமார் 40 வகையான பூச்சிகள் மற்றும் விலங்கினங்களைச் சேர்ந்த 250 இற்கும் மேற்பட்ட மாதிரிகள் சந்தேகநபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே பல தடவைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களும் மீட்கப்பட்ட மாதிரிகளும் கலவான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மீட்கப்பட்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற மாதிரிகளை அடையாளம் காண்பதற்காக இன்று (10) தேசிய அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கவும், அவற்றை உரிய இயற்கை வாழ்விடங்களில் மீள விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.








