யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் தாக்கியதுடன், பாடசாலை நேரத்திலேயே முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்று வீதியில் இறக்கிவிட்டதாக மாணவனின் தாய் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மாணவனின் தாய் தெரிவிக்கையில், தனது மகன் பாடசாலைக்கு தாமதமாகச் சென்றமையால், ஆசிரியர் ஒருவர் அவருக்கு குப்பைகளை அகற்றும் தண்டனை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, குப்பைகளை அகற்றுவதற்காக மாணவன் குனிந்தபோது, அவரது சட்டை வெளியே வந்துள்ளது. இதனை அவதானித்த ஆசிரியர் ஒருவர், சட்டையைச் சரிசெய்யுமாறு கூறி மாணவனின் முதுகில் குத்தியதாகவும், மற்றுமொரு ஆசிரியரும் மாணவனைத் தாக்கியதாகவும் தாய் தெரிவித்துள்ளார்.
பின்னர், மாணவன் அதிபரிடம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அதிபரும் மாணவனைத் தாக்கியதுடன், பாடசாலையில் கல்வி கற்பதற்கு அவர் தகுதியற்றவர் எனக் கூறியதாகவும் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இரண்டு ஆசிரியர்களுடன் முச்சக்கரவண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட தனது மகன், தனது கடைக்கு அருகில் இறக்கிவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடு திரும்பிய மாணவன் தனக்கு முதுகு வலிப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் தாய் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், குறித்த சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவன், வீட்டில் தற்கொலைக்கு முயற்சிப்பதாக மற்றொரு மகன் தொலைபேசி மூலம் தனக்குத் தெரிவித்ததாகவும் தாய் கூறியுள்ளார்.
மேலும், பாடசாலையில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாகவும் தனது மகன் தெரிவித்ததாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினவியபோது, மாணவனைத் தாங்கள் தாக்கவில்லை என மறுத்துள்ளதுடன், மாணவன் பாடசாலை முச்சக்கரவண்டியில் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.







