இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் நிலவரம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் நேரடியாகத் தலையிடுவது இந்தியாவின் நோக்கமல்ல எனக் குறிப்பிட்ட அவர், நாட்டில் அதிகாரப் பகிர்வு நடைமுறை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை முறைமை இலங்கையின் அரசியலமைப்பின் ஓர் அங்கம் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அண்டை நாடு மற்றும் நட்பு நாடு என்ற அடிப்படையில் இந்த விடயத்தை இலங்கை அரசாங்கத்திடம் தொடர்ந்து நினைவூட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மாகாண சபைத் தேர்தலை எப்போது, எவ்வாறு நடத்துவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்குமே உரியது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளுடனான சந்திப்புகள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் தம்மைச் சந்திக்கும்போது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கத்திடம் வலியுறுத்துமாறு கோரிக்கை விடுப்பதாகவும், அந்தக் கருத்துகளை இந்தியா செவிமடுத்து அரசாங்கத்துடனான கலந்துரையாடல்களில் முன்வைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பில் பதிலளித்த அவர், இறையாண்மையைக் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் அழுத்தம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்பது இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டிய விடயம் எனவும், நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவினால் தேவையான ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திய இந்தியத் தூதுவர், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகாலக் கொள்கை மற்றும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.







