இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் காசா பகுதியில், 250 பாலஸ்தீன இளம் ஜோடிகளுக்கான பிரமாண்ட கூட்டுத் திருமண நிகழ்வொன்று அண்மையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
தொடர்ச்சியான போர் பாதிப்புகள், வேலையின்மை மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தத் திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறித்த கூட்டுத் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக 11,600 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அவற்றிலிருந்து குலுக்கல் முறையின் அடிப்படையில் 250 இளம் ஜோடிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, பாரம்பரிய பாலஸ்தீன ஆடைகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட வாகன ஊர்வலங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் திருமணக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
போர் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கும் இளம் ஜோடிகளின் இந்த நிகழ்வு, காசா மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களுக்கு மத்தியில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.







