சிங்கராஜா வனப்பகுதியில் சட்டவிரோதமாகப் பூச்சிகள் மற்றும் ஊர்வனவற்றைச் சேகரித்த குற்றச்சாட்டில், பெண் ஒருவருடன் சீனப் பிரஜைகள் நால்வர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடவலவ தேசிய பூங்காவின் பனஹடுவ வனப் பாதுகாப்பு அலுவலகத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சுமார் 40 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 250 இற்கும் மேற்பட்ட பூச்சிகள் மற்றும் ஊர்வன வகைகள் சந்தேகநபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்டவர்கள் இதற்கு முன்னரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், சந்தேகநபர்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உயிரினங்களும் கலவானை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கைப்பற்றப்பட்ட உயிருள்ள மற்றும் இறந்த உயிரினங்களை உரிய முறையில் இனங்காண்பதற்காக தேசிய அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்குமாறும், ஆய்வுகளின் பின்னர் அவற்றை மீண்டும் இயற்கைச் சூழலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சில நாட்களுக்கு முன்னர் பபவ உத்தரகந்த வனப்பகுதியில் மரபணுக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், இரண்டு ஜேர்மன் பிரஜைகள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








