பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் தாமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அச்சட்டத்தின் பாதிப்புகளை நன்கு அறிந்திருப்பதால் அதனை நிச்சயமாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (11) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு சிலர் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை எனவும், இத்தகைய நடவடிக்கைகளே பௌத்த மதம் தொடர்பில் விமர்சனங்கள் எழுவதற்குக் காரணமாக அமைவதாகவும் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும், குறித்த சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதாகவும், நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அரசாங்கம் முழுமையாகச் செயற்படும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், புதிய சட்டமூலம் ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அநுராதபுர புனித நகரில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கஸ்ஸப்ப தேரர் தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனத் தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து மகாநாயக்க தேரர்களும் கவனம் செலுத்தி ஆராய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.







