மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்துவிட்டு வாகனம் செலுத்திய 23 சாரதிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட போக்குவரத்துப் பொலிஸாரும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகமும் இணைந்து நேற்று புதன்கிழமை (11) விசேட நடமாடும் மருத்துவப் பரிசோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.

மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரட்னத்தின் வழிகாட்டலில், காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையப் பகுதிகளில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, காத்தான்குடியில் 15 பேரும், ஏறாவூரில் 5 பேரும், வாழைச்சேனையில் 3 பேருமாக மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குணதிலக்க தெரிவித்துள்ளார்.









