இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரைப் போன்று செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலிக் காணொளிகள் மற்றும் முதலீட்டு விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவும் இந்தக் காணொளிகளில், மத்திய வங்கி ஆளுநர் நிதி ஆலோசனைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைப் பரிந்துரைப்பது போன்ற போலியான காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் எனவும், அவற்றில் கூறப்படும் நிதி ஆலோசனைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்னர் தகவல்களை உறுதிப்படுத்துமாறும் மத்திய வங்கி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், போலிக் காணொளிகளைப் பகிர்வதைத் தவிர்த்து, எந்தவொரு நிதி அல்லது முதலீட்டு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தகவல் தொடர்பு வழிமுறைகள் ஊடாக உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







