அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர், வைத்தியசாலையில் பொலிஸ் அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் காணொளி வெளியாகியுள்ளது.
குறித்த காணொளியில், வைத்தியசாலைப் படுக்கையில் சிகிச்சை பெற்று வரும் தேரர், தன்னைச் சூழ்ந்திருந்த மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஆவேசமாகப் பேசி அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வது பதிவாகியுள்ளது.
ருவன்வெலிசாய புனிதப் பிரதேசத்திற்கு அருகில் நேற்று (12) சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள், போராட்ட இடத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கும் ரஜாங்கனயே சத்தரதன தேரர் உள்ளிட்ட மற்றொரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்த குற்றச்சாட்டில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஏழு பேரையும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







