தமிழ்த் தேசிய அரசியலில் நீண்டகாலம் பயணித்தவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தனது 69ஆவது வயதில் காலமானார்.
சிறுநீரகப் பாதிப்பினால் நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்த அவர், கடந்த ஜூன் மாதம் கொழும்பில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் மீண்டும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (14) நள்ளிரவை அண்மித்த நேரத்தில் உயிரிழந்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) ஆரம்பகால உறுப்பினரான சிவாஜிலிங்கம், 2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும் செயற்பட்டார்.
மேலும், 2010 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதித் தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அவர், 2025ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த அவரது மறைவு தமிழ்த் தேசிய அரசியல் வட்டாரத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.







