ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயதுச் சிறுமி ஒருவர், நக்கிள்ஸ் மலைத்தொடரில் மீமுரேக்கு அருகிலுள்ள வனப்பகுதியில், தனது இரண்டு மாதப் பெண் குழந்தையுடன் மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து உடுதும்பர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அப்பகுதியிலுள்ள கடையொன்றில் வழக்கத்தைவிட அதிகளவில் உணவுப் பொருட்களை வாங்கிவந்த இளைஞரைப் பின்தொடர்ந்த பொலிஸார், பிளாஸ்டிக் விரிப்புகளால் மறைக்கப்பட்டிருந்த குகையைக் கண்டறிந்தனர். அங்கிருந்த சிறுமியும் குழந்தையும் மீட்கப்பட்டனர்.
மருத்துவ உதவியின்றி குகையிலேயே சிறுமி குழந்தையைப் பெற்றெடுத்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுமியும் குழந்தையும் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞரும், அவருக்கு உதவியதாகச் சந்தேகிக்கப்படும் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் நவம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







