சொந்த வீடுகள் மற்றும் சொத்துக்களை விற்று, வாழ்நாள் முழுவதும் சொகுசுக் கப்பலில் உலகம் சுற்றி வாழ வேண்டும் என்ற கனவுடன் பல இலட்சம் டொலர்களைச் செலவிட்ட 200க்கும் மேற்பட்டோர் தற்போது பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் Villa Vie Residences நிறுவனத்திற்குச் சொந்தமான ‘Villa Vie Odyssey’ என்ற சொகுசுக் கப்பலில் நிரந்தரமாகத் தங்குவதற்காக அறைகளை வாங்கிய பயணிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டு தனது உலகப் பயணத்தை ஆரம்பித்த குறித்த கப்பல், அண்மையில் கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டதுடன், நிதி நெருக்கடி காரணமாக அதன் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், கப்பலில் தங்கியிருந்த பயணிகள் ஏழு மணித்தியாலங்களுக்குள் தங்களது உடைமைகளுடன் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையே இந்த நெருக்கடிக்குக் காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஒரு அறைக்கான மாதாந்திர எரிபொருள் செலவு 1,800 டொலரிலிருந்து 8,000 டொலர் வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடன் பிரச்சினை காரணமாக குறித்த கப்பல் சிங்கப்பூரில் நீதிமன்ற உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாழ்நாள் சேமிப்பைச் செலவிட்டு கப்பலையே நிரந்தர வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்த பலர் தற்போது தங்குமிடமின்றி தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், தாங்கள் செலுத்திய பணத்தை மீளப் பெற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.







