இதுவரை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப் புதைகுழிகளில் அவற்றின் அளவில் மூன்றாவது இடத்தைப் பெறும் மனிதப் புதைகுழி தொடர்பாக, கடந்த பதினொரு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு காணாமற்போனோரின் உறவினர்கள் குழுவொன்று விடுத்த கோரிக்கையைப் பரிசீலிக்க மாத்தளை மேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளையும் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளையும் மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரி, நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர், காணாமற் போனோரின் குடும்பங்களின் ஒன்றியத் தலைவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ப்ரிட்டோ பெர்னாண்டோ தலைமையில், நவம்பர் 11ஆம் திகதி காலை மாத்தளை நகரில் அமைதியான போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தில் 2012ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான, 2015 ஆண்டு முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு ’88–89 காணாமற்போனோரின் குடும்பங்களின் ஒன்றியம்’ விடுத்த கோரிக்கையை, மாத்தளை நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி ஹர்ஷன தனுஷ்க ரத்நாயக்க 2026 ஜூலை 16ஆம் திகதி நிராகரித்திருந்தார்.
முன்னாள் நீதிபதியினால் வழங்கப்பட்ட தீர்ப்பை மீண்டும் அதே நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாமையினால், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த வழக்கை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
அறிக்கை –
அதன்படி, மனுதாரர்கள் சார்பில் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி ஹிமாலி குலரத்ன, நவம்பர் 11ஆம் திகதி மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி நலின் ஹேவாவசமிடம், மீளாய்வு விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணாமற்போனோரின் குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட உறவினர்கள் 18 பேரின் பெயர்களுடன், எதிர்காலத்தில் மேலும் சிலரின் பெயர்களும் இணைக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தமக்கு நெருக்கமானவர்கள் காணாமற்போன நிலையில், பாதிக்கப்பட்ட பெருமளவிலானோர் அன்றைய தினம் காலை மாத்தளை நகரில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்திலும், நீதிமன்றத்திலும் இருந்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
மாத்தளை மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக 3 அறிக்கைகள் காணப்பட்ட போதிலும், மூன்றாவது அறிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு 2015ஆம் ஆண்டு அந்த வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக, மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி ஹிமாலி குலரத்ன, ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“இலங்கையின் சட்ட மருத்துவ அதிகாரி, அவர் கவனத்தில் எடுத்துக்கொண்ட சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராஜ் சோமதேவவும் அறிக்யையொன்றை வழங்கியுள்ளார். அதேபோன்று, ‘பீட்டா அனலிட்டிக்’ (Beta Analytic) ஊடாக காபன் காலக்கணிப்பு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மூன்றாவது அறிக்கையின் அடிப்படையில், சுமார் 1950ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு தொற்றுநோய் காரணமாகவே இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறி, இந்த வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அந்தக் கருத்தே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, மூன்று விதங்களில் கன்சர்ன்ஸ் (concerns) இருந்தபோதிலும், மூன்றாவது அறிக்கை மாத்திரம் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அந்த முதலாவது மற்றும் இரண்டாவது அறிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதையே நான் எனது பிரதான வாதமாக முன்வைத்தேன்.”
2013ஆம் ஆண்டு மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள காணியிலிருந்து 155 மனித உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த உடல் எச்சங்கள் 1986–1990 காலப்பகுதியில் தெற்கில் நிலவிய பயங்கரமான அடக்குமுறைக் காலத்தைச் சேர்ந்தவை என சட்ட மருத்துவ நிபுணர் அஜித் தென்னகோனின் அறிக்கைகளின் முடிவுகளிலும், தொல்பொருளியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கைகளின் முடிவுகளிலும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
எனினும், புளோரிடாவின் மியாமியில் அமைந்துள்ள ‘பீட்டா அனலிட்டிக்’ (Beta Analytic) என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டதாக பொலிஸாரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், மாத்தளையில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் 1950ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியைச் சேர்ந்தவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் நீதவான் நீதிமன்றத்திலும் கோரிக்கை விடுத்திருந்ததைப் போலவே, மனித புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக மரபணுப் பரிசோதனை (DNA Test)பரிசோதனை மேற்கொள்ளுமாறு மாத்தளை மேல் நீதிமன்றத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக சட்டத்தரணி ஹிமாலி குறிப்பிட்டிருந்தார்.
“நீதவான் நீதிமன்றத்தில் நான் இந்த டி.என்.ஏ பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ளாவிட்டால், அந்த மனித எச்சங்கள் சிதைவடையக்கூடும் என்றும் தெரிவித்திருந்தேன்.”
அறிக்கை –
மேலும் வாய்மூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக, மனுதாரர்கள் சார்பில் 2027 ஜனவரி 13ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு சட்டத்தரணி ஹிமாலி குலரத்னவுக்கு கால அவகாசம் வழங்கிய மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி நலின் ஹேவாவசம், குறித்த சட்டத்தரணியிடம் 2015ஆம் ஆண்டு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோருவதற்கு இவ்வளவு காலம் ஏன் அமைதியாக இருந்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்த சூழ்நிலைகள் காரணமாக ஒவ்வொரு விடயங்கள் மாறுபடலாம் என நான் தெரிவித்தேன்.குறிப்பாக, அவர்களின் பொருளாதார நிலைமை மற்றும் நிதி நெருக்கடிகள், அடுத்ததாக மீண்டும் மீண்டும் முறைப்பாடுகளைச் செய்தும் அவை வெற்றியளிக்காததால் எதிர்பார்ப்புகள் உடைந்ததைப் போல நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்துவிட்டனர். அதன்பின்னர் குடும்பத்தில் எஞ்சியுள்ள மற்றவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டது” என அவர் தெரிவித்தார்.
மாத்தளை மனித புதைகுழி தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு, பெருமளவிலான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட வழக்காக இருப்பதால், அந்த ஆவணங்களின் மூலப் பிரதிகளைத் தனக்கு ஆய்வு செய்ய வேண்டும் என மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி நலின் ஹேவாவசம் திறந்த நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆட்சியின் முதன்மை கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சிக் காலத்தில், நூற்றுக்கணக்கானோர் காணாமற்போன மாத்தளை மாவட்டத்திற்கு, பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்தவர் கோட்டாபய ராஜபக்ச ஆவார்.
1989ஆம் ஆண்டு, அவரின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளின் பொறுப்பில் இருந்தபோது 700க்கும் மேற்பட்டோர் காணாமற்போனதாக, இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS) மற்றும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டம் (ITJP) ஆகிய அமைப்புகள் 2022ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் நம்பகமான ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளன.
அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவொன்று 2023ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பி, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஏனையோரைப் பொறுப்புக்கூறச் செய்வதற்காக அரசாங்கம் விசாரணைகளை நடத்தி என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனக் கேள்வி எழுப்பியிருந்தாலும், அதற்கு இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.








