இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டுவந்தமை எந்தவொரு மாயாஜாலமும் அல்ல எனவும், முறையான நிதி ஒழுக்கம் மற்றும் சிறந்த நிதி முகாமைத்துவத்தின் பிரதிபலிப்பே எனவும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டை பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் மற்றும் சமூக ரீதியிலும் ஸ்திரமான நிலைக்குக் கொண்டுவருவதற்கு முன்னுரிமை வழங்கியதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தி, நாட்டை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதே இம்முறை வரவு – செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை அரசியல் பேதங்களுக்கு அப்பால் பலரும் பாராட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 2025ஆம் ஆண்டில் இலங்கை 5 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்ததாகவும், 2026ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 5.1 சதவீத வளர்ச்சியும், இரண்டாவது காலாண்டில் 4.2 சதவீத வளர்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்தமைக்கு மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றமே முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்தப் பிராந்தியத்தின் பல பகுதிகளிலும் பொருளாதார வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.







