சந்தையில் தொடர்ச்சியாக லாஃப்ஸ் எரிவாயுவை விநியோகிக்க முடியாத பட்சத்தில், நுகர்வோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை குறித்த நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் சந்தையில் நிலவும் விநியோகத் தடைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக, நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேற்று (16) நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, எரிவாயு விநியோகத்தைச் சீராக முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டால், வெற்றுச் சிலிண்டர்களைப் பெற்றுக்கொண்டு அதற்கான பணத்தை நுகர்வோருக்கு மீள வழங்க வேண்டும் என அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் லாஃப்ஸ் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், கடந்த 10ஆம் திகதி நள்ளிரவு முதல் நிறுவனம் எரிவாயு விலையை அதிகரித்திருந்தது.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாயிலிருந்தும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 732 ரூபாயிலிருந்தும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நிறுவனப் பிரதிநிதிகள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரொன்றைக் கொண்டுவந்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் மீளாய்வு செய்து உரிய கவனம் செலுத்துமாறு அதிகார சபையின் அதிகாரிகள் நிறுவனப் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த நிறுவனப் பிரதிநிதிகள், விலைத் திருத்தம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இன்று கூடவுள்ளதாகவும், அதன் பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.







