BBC, HSBC UAE, Air France மற்றும் IKEA உள்ளிட்ட உலகின் சுமார் 178 முக்கிய இணையத்தளங்கள் தீங்கிழைக்கும் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலின் ஊடாக இணையப் பயனர்களின் கடன் அட்டை விபரங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி தொடர்பான தகவல்களைத் திருடுவதற்கு ஹெக்கர்கள் முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
‘Optimizely’ என்ற டிஜிட்டல் தளத்தில் ஊடுருவி, தீங்கிழைக்கும் JavaScript குறியீடுகளைச் சேர்த்ததன் மூலம் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ‘Cyber News’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை முதன்முதலில் கண்டறிந்த சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஸ்கொட் ஹெல்மே (Scott Helme), தனது வலைப்பதிவில் தாக்குதலுக்கு இலக்கான இணையத்தளங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, BBC, CNN, Zoom, Salesforce, GitLab, IKEA, HSBC UAE, Equifax, Air France-KLM, Ledger மற்றும் Peacock உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் இணையத்தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த நவம்பர் 16ஆம் திகதி சுமார் ஒன்பது மணி நேரத்திற்குள் தாக்குதலுடன் தொடர்புடைய கிரிப்டோகரன்சி பணப்பைகளுக்கு 7,040 அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலின் மூலம் Apple சாதனங்களையும் இலக்குவைத்து தீங்கிழைக்கும் குறியீடுகளைப் பதிவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இணையத்தளங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து தீங்கிழைக்கும் குறியீடுகள் அகற்றப்பட்டுள்ளதாக ஸ்கொட் ஹெல்மே தெரிவித்துள்ளார்.
இதனிடையே, Optimizely நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது ‘Optimizely Web Experimentation’ சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களைப் பாதித்த பாதுகாப்புச் சம்பவம் கண்டறியப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சேவைப் பாதை முடக்கப்பட்டுள்ளதாகவும், ஊடுருவப்பட்ட குறியீடுகள் அகற்றப்பட்டுள்ளதுடன், தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.







