குவைத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளமான அலி அல் சலேம் (Ali Al Salem) விமானத் தளத்தை ஆளில்லா விமானங்கள் மூலம் இலக்கு வைத்துத் தாக்கியதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இன்று (18) அதிகாலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், அமெரிக்காவின் பேட்ரியட் (Patriot) வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை ஏவும் தளங்கள் இலக்கு வைக்கப்பட்டதாக ஈரான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், குவைத் இராணுவம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் எதிரி ஆளில்லா விமானங்களை இடைமறித்து வருவதாக அறிவித்தது. கேட்கப்படும் வெடிப்புச் சத்தங்கள் தாக்குதல்களை இடைமறிப்பதன் விளைவாக இருக்கலாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஈரானின் தொடர் தாக்குதல்கள் மற்றும் சமீபத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களைக் குவைத் வெளிவிவகார அமைச்சு கண்டித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அமெரிக்க இராணுவம் உடனடியாகக் கருத்து வெளியிடவில்லை. தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்தும் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.







