18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களைச் செலுத்த அனுமதிக்கும் பெற்றோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படலாம் எனப் போக்குவரத்துப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர எச்சரித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளைச் செலுத்துவதற்கு பெற்றோர் அனுமதி வழங்குவது சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தைச் செலுத்துவதற்கு அனுமதி வழங்கும் வாகன உரிமையாளருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவ்வாறான உரிமையாளர்களும் விளக்கமறியலில் வைக்கப்படலாம் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.







