இலங்கையின் பல பகுதிகளில் இன்று (23) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி, வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.








