வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்றைய தினத்தை தேசிய எதிர்ப்பு நாளாக அறிவித்துள்ளன.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அரச ஊழியர்கள் அனைவருக்கும் 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அனுராத சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கறுப்பு ஆடை அணிந்து பாடசாலைகளுக்குச் செல்லவுள்ளதாக தரம்பெற்ற அதிபர்கள் சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் வர்க்கத்தின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்ளத் தவறியமையே தற்போதைய நிலைமைக்குக் காரணம் என அகில இலங்கை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் உதயனி திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் லசித கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாதியர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும் என அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர்.








