பாடசாலை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள் ஒன்றிணைக்கப்படும் சந்தர்ப்பங்களில், மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூல பாடசாலைகள் போதியளவில் இல்லாததால் மாணவர்களின் வருகை குறைவதுடன், இடைவிலகல் அதிகரிப்பதும் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்குத் தீர்வாக, தேவையான பகுதிகளில் தமிழ் மொழிமூல வகுப்புகளை ஆரம்பிக்கவும், எதிர்காலத்தில் மும்மொழிப் பாடசாலையொன்றை அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் பாடசாலை வருகையை அதிகரிப்பதற்கான போசாக்குத் திட்டங்கள், பாடசாலை பாதுகாப்பு, பிறப்புச் சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கு உரிய ஆவணங்களைப் பெற்றுக்கொடுத்தல், அதிபர்களின் இடமாற்றம் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (23) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட கல்வி உபகுழுக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.








