அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகாமம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை எனச் சந்தேகிக்கப்படும் குறித்த துப்பாக்கிகள் தொடர்பில் தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சாகாமம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, அவற்றை மறைத்து வைத்திருந்தவர்கள் யார் என்பது தொடர்பில் திருக்கோவில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








